தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இல்லத்திற்கு இன்று மாலை முதல்வர் விஜய் வருகை தந்தார். அவரை திருமாவளவன் நேரில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். இந்தச் சந்திப்பின் போது விசிக முக்கிய நிர்வாகிகள் வன்னி அரசு, சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விசிக சார்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble) அடங்கிய நகலை முதல்வருக்கு திருமாவளவன் பரிசாக வழங்கினார்.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த பிறகு, இருவரும் சந்தித்துக்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு இதுவாகும்.

திருமாவளவனை சந்திப்பதற்கு முன்னதாக, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார்:

மண்ணடியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற விஜய்க்கு, தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற முதல்வர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக நேற்று (மே 11), முதல்வர் விஜய் அவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் சந்திப்புகள் தமிழக அரசியலில் ஒரு புதிய இணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.