தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் முடிந்து மூன்று நாள்கள் கடந்த நிலையிலும், சமூக வலைத்தளங்களில் அதுகுறித்த விவாதங்களும் ஒரு ஒற்றைப் புகைப்படமும் இன்னும் பேசுபொருளாகவே நீடித்து வருகின்றன.

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துப் பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கேக் வகைகளைத்தான் தற்போது இணையவாசிகள் மற்றும் உணவுப் பிரியர்கள் கூகுளில் வலைவீசித் தேடி வருகின்றனர்.

த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தில், மிகவும் நேர்த்தியாக வரிசையாக வைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கேக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. அவை 'டிராமிசு' (Tiramisu) வகையைச் சேர்ந்த கேக்குகள் என்பதும், ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட பிரபல 'கான்சு' (Concu) கேக் கடையின் பிரத்யேகத் தயாரிப்பு என்பதும் நெட்டிசன்களின் தீவிரத் தேடலில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருக்கும் இந்த கேக்குகள் எப்படி சென்னைக்கு வந்தன? விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதா? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

சென்னைக் கடைகளிலும் ஆர்டர்கள் மிரட்டல்

டிராமிசு கேக் தவிர, உண்மையான மாம்பழத்தின் கூழ் மற்றும் துண்டுகளைக் கொண்டு செய்யப்படும் 'மாம்பழ வெண்ணிலா கேக்' மற்றும் 'ஸ்ட்ராபெரி ஒயிட் சாக்லேட் கேக்' ஆகியவையும் அந்தப் புகைப்படத்தில் இருந்தன. இவை இரண்டும் சென்னையில் உள்ள இரு வேறு புகழ்பெற்ற கேக் நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்டவை ஆகும்.

த்ரிஷாவின் இந்த ஒற்றைப் பதிவால், சென்னையில் உள்ள அந்தச் சம்பந்தப்பட்ட கடைகளுக்குத் தற்போது ஆர்டர்கள் குவித்து வருகின்றன. குறிப்பாக, த்ரிஷா வாங்கிய அதே மாடலில் நாள்தோறும் கிட்டத்தட்ட 50 கேக்குகள் வரை தற்போதும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.

"ஆர்டர் செய்தது த்ரிஷாவா?" - திகைப்பில் ஹைதராபாத் நிறுவனம்

ஜூலை 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு த்ரிஷா இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, ஹைதராபாத்தில் உள்ள 'கான்சு' கடைக்கு ஆன்லைனில் டிராமிசு கேக்கிற்கான ஆர்டர்கள் மிரட்டலாகக் குவியத் தொடங்கியுள்ளன.

திடீரென ஆர்டர்கள் அதிகரித்ததன் பின்னணியை ஆராய்ந்த அந்த நிறுவனத்திற்குப் பின்னர்தான் உண்மை தெரிந்திருக்கிறது. தங்களுக்கு வந்த முதல் டிராமிசு கேக் ஆர்டரைச் செய்தது நடிகை த்ரிஷா என்பதும், அது தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்காக வாங்கப்பட்டது என்பதும் அவர்களுக்குப் பின்னரே தெரியவந்துள்ளது.

ஓயாத கேக் தயாரிப்பு: விரைவில் சென்னைக்கு வருகிறது!

பிறந்தநாள் முடிந்து சில நாள்கள் ஆகியும் இந்த கேக்குகளுக்கான மவுசு குறையவில்லை. வார இறுதி நாள்களில் (Weekend) தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், ஊழியர்கள் ஓய்வின்றித் தொடர்ந்து கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பெங்களூரு மற்றும் மும்பையில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த ஹைதராபாத் நிறுவனம், இந்த அதீத வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் சென்னையிலும் தனது கிளையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.