உலகம் முழுவதும் விலைவாசி உயர்வு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், தனது குறைந்த ஊதியத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீன இளம்பெண் ஒருவர் மேற்கொண்ட விசித்திரமான போராட்டம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷாங்கியூ (Shangqiu) பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், தான் பார்க்கும் வேலைக்கும் தனக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும் ஊதிய உயர்வு கிடைக்காததால், அவர் ஒரு வினோதமான முடிவை எடுத்தார்.

"நீங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறீர்களோ, அந்த அளவிற்குத்தான் என்னால் வேலை செய்ய முடியும்" (Work according to pay) என்ற கொள்கையை முன்னெடுத்த அந்தப் பெண், அலுவலக வேலை நேரத்திலேயே தனது மேசையில் படுத்து சுமார் 5 மணிநேரம் உறங்கியுள்ளார்.

அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து அவர் மேற்கொண்ட இந்த 'உறக்கப் போராட்டம்' சக ஊழியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை ஒழுக்கீனமான செயலாகக் கருதிய அந்த நிறுவனத்தின் நிர்வாகம், அவரைப் பணியிலிருந்து நீக்கப்போவதாகத் தெரிவித்து இறுதி எச்சரிக்கை (Final Warning) விடுத்துள்ளது.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் சமூக வலைத்தளத்தில் கண்ணீர் மல்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிறுவனம் தனக்கு அநீதி இழைப்பதாகவும், உழைப்பைச் சுரண்டுவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. "குறைந்த ஊதியம் தரும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடம்" என ஒரு தரப்பினரும், "வேலை செய்யும் இடத்தில் இது போன்ற செயல்கள் முறையற்றவை" என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.