ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி அன்னையைப் போற்றி வழிபடும் வகையில் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் திங்கள்கிழமை திரண்டனர்.

குடும்பத்துடன் குவிந்த மக்கள்

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக் கரையில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து காவிரி அன்னைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து ஆடிப்பெருக்கைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

பொதுமக்கள் ஆற்றங்கரையில் மாவிளக்கு ஏற்றி, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொரி மற்றும் பழங்களை வைத்துப் படைத்து காவிரி அன்னையை வழிபட்டனர்.

புதுமணத் தம்பதிகளின் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கு நாளில் ஓடும் நீரில் திருமண மாலையை விட்டால், குடும்பத்தில் செல்வச் செழிப்பு பெருகும் என்பது ஐதீகம். இதனையொட்டி, ஏராளமான புதுமணத் தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் தங்களது திருமண மாலைகளைச் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, தாலியைப் பிரித்துக் கோத்து காவிரி அன்னைக்குப் படைத்து மீண்டும் அணிந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஸ்ரீசந்திரசேகர பெருமான் தீர்த்தவாரி

ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக, சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வல்லம்படுகையில் உள்ள கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்குச் சிறப்புத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

.

மண்டகப்படி நிகழ்ச்சி:

தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள வழக்கப்படி, வல்லம்படுகை பரதேசியப்பன் கோயில் நுழைவாயில் அருகே உள்ள நீராழி மண்டபத்தில் ஸ்ரீசந்திரசேகர பெருமானின் சிறப்பு மண்டகப்படி நிகழ்வும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.