திருநெல்வேலியில் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு (Aggravated Penetrative Sexual Assault) ஆளாக்கிய தினக்கூலி தொழிலாளி ஆனந்த சேகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 30, செவ்வாய்க்கிழமை) ஏகமனதாக உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 12, 2026 அன்று விதித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதுரை கிளையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு, இன்று சென்னையில் உள்ள முதன்மை அமர்வில் வாசிக்கப்பட்டது. தீர்ப்பை எழுதிய நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், குற்றவாளியின் கொடூர செயலைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
"மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை மனிதர்களை, குறிப்பாகக் குழந்தைகளை ஒரு சமூகம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் நாகரிகம் அளவிடப்படுகிறது. இங்குள்ள குற்றவாளி வெறும் உடலுக்கு எதிரான குற்றத்தைச் செய்யவில்லை; 3 பிஞ்சு உள்ளங்களுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்து, ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை மற்றொரு குழந்தையைப் பார்க்கக் கட்டாயப்படுத்தி, திட்டமிட்ட பயங்கரவாதத்தை அரங்கேற்றியுள்ளார். சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல், அக்குழந்தைகளின் எதிர்கால ஒளியை அணைத்து, வாழ்நாள் முழுவதும் மறையாத வடுக்களைக் கொடுத்துள்ளார்."
இவ்வளவு கொடூரமான, மனித மனசாட்சியற்ற குற்றத்திற்கு, சமூகத்தின் கூட்டு எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில்தான் நீதித்துறையின் பதில் அமைய வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இத்தகைய கொடூரமான குற்றவாளிக்குக் கருணை காட்டுவது, சட்டத்தை வேடிக்கை பார்க்கும் பொருளாக்கிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், இத்தகைய வழக்குகளில் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றினால், அது சமூகத்திற்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்த்துவிடும் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
ஒரு குழந்தையின் ஆன்மா மிகவும் மலிவானது என்ற எண்ணம் உருவாகிவிடும்.
ஒரு மிருகம் குழந்தையின் வாழ்நாள் நிம்மதியைப் பறித்துவிட்டு, சிறைச்சாலையில் சொகுசாக இருக்கலாம் என்ற தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும்.
மரண தண்டனை என்பது 'அரிதினும் அரிதான' (Rarest of Rare) வழக்குகளில் மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு அந்த விதிவிலக்கிற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றனர். பிஞ்சு குழந்தைகளைத் தங்களின் மிருகத்தனமான ஆசைக்கு இரையாக்குபவர்களைக் கையாளும்போது சட்டம் இரும்புக் கரம் கொண்டு பாய வேண்டும்.
இந்தத் தீர்ப்பு, நாட்டின் எதிர்காலமான குழந்தைகளைத் துன்புறுத்த நினைப்பவர்களுக்குக் கடும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்ட அமர்வு, "இந்த நீதிமன்றம் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படவில்லை; மாறாக நீதி, தர்மம் மற்றும் சமூக ஒழுங்கை நிலைநாட்டவே இந்த மரண தண்டனையை உறுதி செய்கிறது," எனத் தெளிவுபடுத்தியது.
குற்றவாளி மனித சமூகத்தோடு வாழும் உரிமையை இழந்துவிட்டார் என்றும், சட்டத்தில் இவருக்கு புகலிடம் இல்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக, 1992-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பான 'மதன் கோபால் கக்காட் எதிர் நவல் துபே' வழக்கு மேற்கோள் காட்டப்பட்டது.
நீதிமன்ற வாளைக் கையில் ஏந்தியிருக்கும் நீதிபதிகள், குற்றத்தின் வீரியம் தேவைப்படும் பட்சத்தில், அந்த வாளை அதன் இறுதி எல்லை வரை மிகக் கடுமையாகப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரிகளைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் அந்த நீதித்துறை வாளை முழு வீரியத்துடன் பயன்படுத்துவது அவசியம் எனக்கூறி மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.





