சென்னையில் இன்று பிற்பகல் திடீரென வீசிய சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 4 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென வானம் இருண்டு, பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடுதளப் பகுதியில் போதிய வெளிச்சமின்மை மற்றும் பலத்த காற்று வீசியதால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், மோசமான வானிலை காரணமாக தகுந்த நேரத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துப் பறந்தன.
பதிக்கப்பட்ட விமானங்கள்: சேலம், கோவை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தவித்தன.
மழை மற்றும் பலத்த காற்றால் தரையிறங்குவது மட்டுமல்லாமல், சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட முடியாமல் தாமதமாகி வருகின்றன.
விமான நிலைய வட்டாரத் தகவல்:
"திடீர் சூறாவளி மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் என ஒட்டுமொத்தமாக 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை சீரானதும் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும்."
திடீரென ஏற்பட்ட இந்த விமான சேவை மாற்றங்களால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் விமான நிலைய வளாகத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து, பரபரப்பான சூழல் காணப்பட்டது.





