உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுகளைக் கர்நாடக அரசு முற்றிலும் புறக்கணித்துச் செயல்படுத்தத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை (ஆகஸ்ட் 17) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த காவிரி வழக்கு 61-ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த முதன்மை மனு விவரம்:
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள்:
ஆணையத்தின் உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 30.07.2026 அன்று பிறப்பித்த உத்தரவில், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது.
அலட்சியப் போக்கு: ஆனால், ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8:00 மணி வரை கர்நாடக மாநிலம் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீர்வரத்து வெறும் 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது.
விவசாயிகள் பாதிப்பு: உச்ச நீதிமன்றம் மற்றும் ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகா வேண்டுமென்றே புறக்கணிப்பதால், வாழ்வாதாரத்திற்காகக் காவிரி நீரை முழுமையாகச் சார்ந்திருக்கும் தமிழகக் காவிரிப் படுகை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, 30.07.2026 தேதியிட்ட ஆணையத்தின் முடிவை உடனடியாகச் செயல்படுத்தவும், கர்நாடக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தைக் கண்காணிக்கவும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கூடுதல் பிரமாணப் பத்திரம் (ஆகஸ்ட் 12):
இவ்வழக்கில் கர்நாடக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசு ஆகஸ்ட் 12-ஆம் தேதி கூடுதல் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்:
"ஆணையம் 11.08.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி 12.08.2026 முதல் 27.08.2026 வரை ஒரு நாளைக்கு 12,000 கனஅடி நீர் விடுவிப்பிற்குப் பதிலாக, விகிதாசார சூத்திரத்தின் அடிப்படையில் நிலுவையில் உள்ள 21.357 டி.எம்.சி மற்றும் ஆகஸ்ட் பிற்பாதிக்கான 15.278 டி.எம்.சி என மொத்தம் 36.635 (சுமார் 37) டி.எம்.சி நீரை (அதாவது நாள் ஒன்றுக்கு 21,413 கனஅடி / 1.85 டி.எம்.சி வீதம்) 12.08.2026 முதல் 31.08.2026 வரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிட வேண்டும்."
நாளை நடைபெறும் விசாரணையின் போதே உச்ச நீதிமன்றத்தின் இறுதி நிலைப்பாடு தெரியவரும் என்பதால், இச்சுற்றுச்சூழல் மற்றும் விவசாயப் பிரச்சினை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





