பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 10 தற்போது தனது 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் எதிர்பாராத திருப்பமாக இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விறுவிறுப்பான 6வது வாரம்:

இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக 'அடாவடி' அன்சரும், எதிர் அணித் தலைவராகத் தன்யாவும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் தலைமையில் இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பான டான்ஸ் மரத்தான் போட்டி நடைபெற்று ரசிகர்களைக் கவர்ந்தது.

இதனிடையே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நாமினேஷன் சுற்றில், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் சக போட்டியாளர்கள் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் அஷ்மிதா, அவினாஷ், சாந்தினி, கரிஷ்மா, முகேஷ், ஷமா, ஷாதிகா மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றனர்.

குறைந்த வாக்குகளால் வெளியேறிய சாந்தினி:

இடம்பெற்ற போட்டியாளர்களுக்கு மக்கள் தீவிரமாக வாக்களித்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

திடீர் வெளியேற்றத்தால் அதிர்ச்சி:

வழக்கமாக ஒருவரே வெளியேறும் நிலையில், இம்முறை சாந்தினியுடன் சேர்த்து நடிகர் ராகவ் உடல்நலப் பிரச்னை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியிருப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறியிருப்பது பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.