அதிக வட்டி தருவதாகக் கூறி மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட 'பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' (BLM) நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பிரேம்குமாரை கேரள மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
வழக்கின் பின்னணி:
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரேம்குமார், கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னையில் 'பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்களின் சேமிப்புப் பணத்திற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ. 5,000 கோடிக்கும் மேல் முதலீடுகளைத் திரட்டியுள்ளார்.
பண மோசடி மற்றும் முறைகேடு:
டெபாசிட் காலம் முடிவடைந்த பிறகும், முதலீட்டாளர்களுக்கு உரிய அசல் மற்றும் வட்டிப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக பி.எல்.எம் நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டுறவு சங்க விதிகளுக்கு முரணாக, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை பிரேம்குமார் தனது சொந்த வங்கிக் கணக்குகளுக்கும், தனது குடும்பத்தினர் பெயர்களுக்கும் மற்றும் பல்வேறு தனியார் தொழில்களுக்கும் சட்டவிரோதமாகப் பறிமாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் கைது - மருத்துவமனையில் அனுமதி:
இந்த பிரம்மாண்ட நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கேரள குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் பிரேம்குமாரைக் கைது செய்தனர்.
கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பிரேம்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் உடனடியாக சென்னை நுங்கம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை நிறைவடைந்ததும், அவரை நீதிமன்றக் காவலில் கேரளாவுக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.





