வங்கதேசத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தட்டம்மை (Measles) பாதிப்பு தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு இதுவரை 34,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டம்மையின் வீரியம் அண்டை நாடான இந்தியாவிற்கும் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கதேசத்தின் ஒட்டுமொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 58 மாவட்டங்கள் இந்தத் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்த நோயின் பிரதான இலக்காக உள்ளனர்.

போதிய அளவில் தடுப்பூசி செலுத்தப்படாதது மற்றும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையே இந்தத் தீவிர பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இந்தத் தொற்று இந்திய எல்லைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

தடுப்பூசி போடாத ஒரு நபர், பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்குத் தொற்று ஏற்பட 90% வாய்ப்பு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் அறிகுறிகள்

தட்டம்மை ஒரு மிகவேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று என்பதால், பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முக்கிய அறிகுறிகள்:

  • கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல்.

  • கண்கள் சிவந்து காணப்படுதல்.

  • உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்படுதல்.

தடுப்பு முறைகள்:

  1. MMR தடுப்பூசி: இந்நோய்க்கு எதிரான ஒரே கேடயம் MMR தடுப்பூசி மட்டுமே. இதனை இரண்டு தவணைகளில் (Doses) தடையின்றி செலுத்துவது அவசியம்.

  2. தனிமைப்படுத்துதல்: அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை உடனடியாகத் தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்.

  3. மருத்துவ உதவி:

  4. சுய மருத்துவம் செய்யாமல், அறிகுறிகள் தென்பட்ட உடனே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவரை அணுக வேண்டும்.

பெற்றோர்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் செலுத்தப்படும் தடுப்பூசியும் மட்டுமே இந்த அபாயகரமான சூழலிலிருந்து குழந்தைகளைக் காக்கும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.