தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி விவகாரமும் ‘துரோகம்’ சொல்லும் நீக்கமும்: அவையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், ”காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால், நிறைய விஷயங்கள் பேசலாம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர் கே.என். நேரு, ”துரோகம்” என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
நேரலை கோரிக்கையும் அமைச்சரின் சாடலும்: இதையடுத்து பேசிய சட்டத் துறை அமைச்சர், ”சட்டப்பேரவையில் திமுகவினர் முன்வரிசைக்கு வருவதையும் நேரலையில் காண்பிக்க வேண்டும். இதனைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாக தெரிவித்ததாவது:
”என்ன வார்த்தை இது? பைத்தியம் மாதிரி பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். இதைத்தான் சட்ட அமைச்சரும் சுட்டிக்காட்டினார்.
ஒருமையில் பேசுவது, 'வாடா போடா' என்று பேசுவது மற்றும் மரபுக்கு மாறான வார்த்தைகளைப் பேசுவது போன்றவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
தவெகவினரை கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் விஜய்யின் கடைக்கண் பார்வை ஒன்று போதும். ஆனால், இங்கு திமுக உறுப்பினர் அடிக்க பாய்ந்து வருகிறார்; கையை ஓங்கி வருகிறார்,” என்று குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் நடத்தையை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் அவையில் ஆவேசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





