தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியதாக வெளியாகியுள்ள அதிரடித் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் சிங்கம் எனப் புகழப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பதவியை விருப்ப ஓய்வு பெற்று, 2020-ல் பாஜகவில் இணைந்தார்.

  • அதிவேக வளர்ச்சி: கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே, அதாவது ஜூலை 2021-ல் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  • மக்கள் கவனம்: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ என்ற மாநிலம் தழுவிய பிரம்மாண்ட நடைபயணம் ஆகியவற்றின் மூலம் தமிழக மக்களிடையே அண்ணாமலை மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து அண்ணாமலையின் அரசியல் பாதையில் தொய்வு ஏற்பட்டது.

  1. பதவி பறிப்பு: கடந்த 2025 ஆம் ஆண்டு மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

  2. தொகுதி மறுப்பு: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விரும்பிக் கேட்ட தொகுதி அவருக்கு ஒதுக்கப்படாததால், அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இருப்பினும், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்.

தில்லியில் ராஜினாமா கடிதம்: அமித் ஷாவுடன் சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலருடன் அண்ணாமலைக்குக் கருத்து வேறுபாடு நீடித்து வந்த சூழலில், தற்போது அவர் அதிரடியாக தில்லிக்கு விசிட் அடித்துள்ளார்.

இன்று காலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் மற்றும் கட்சியில் தனக்கு நேர்ந்த புறக்கணிப்புகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் 4-ல் புதிய கட்சி அறிவிப்பு?

கடந்த ஒரு வார காலமாகவே அண்ணாமலை 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகத் தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.

வருகின்ற ஜூன் 4, வியாழக்கிழமை அன்று அண்ணாமலை தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அன்றைய தினம் தனது புதிய அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.