தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முக்கிய அரசியல் பிரமுகருமான அண்ணாமலை, நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் மனம் திறந்து உரையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். தில்லி சென்று திரும்பிய கையோடு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், நாளை அவர் புதிய கட்சி குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிடலாம் என அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

''நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.''

அண்ணாமலையைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தேசியத் தலைமை தோல்வி அடைந்துள்ளதாகத் தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய சந்திப்புகள்: தில்லிக்குச் சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவா் நிதின் நவின், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மற்றும் பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துத் தனது இறுதி முடிவைத் தெரிவித்துள்ளாா்.

அவசர ஆலோசனை: அண்ணாமலையின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களை தில்லிக்கு பாஜக தலைமை அவசரமாக வரவழைத்துச் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

இருப்பினும், இந்த நள்ளிரவு பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இன்று (ஜூன் 4) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அண்ணாமலை, பிறந்தநாள் பரிசாக இன்றே தனது அரசியல் அதிரடி முடிவை வெளியிடக்கூடும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போதைய நிலவரப்படி நாளை (ஜூன் 5) வெள்ளிக்கிழமை மதியம் தனது இறுதி முடிவை சமூக வலைதள உரையாடலின் போது அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அண்ணாமலையின் இந்த சமூக வலைதள நேரலை அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

.