நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

நேற்று (மே 1) நடிகர் அஜித் குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரையரங்குகளில் அவரது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களான 'ஆழ்வார்' மற்றும் 'பில்லா' ஆகியவை மறுவெளியீடு செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, கேக் வெட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சமூக வலைதளங்களிலும் அஜித்தின் பிறந்தநாள் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தன.

ஒவ்வொரு ஆண்டும் அஜித்தின் பிறந்தநாளில் அவரது அடுத்த படம் குறித்த டைட்டில் அல்லது போஸ்டர் வெளியாவது வழக்கம். அந்த வகையில், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கவிருக்கும் 'ஏகே-64' (AK 64) படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

குட் பேட் அக்லி' வெளியாகி ஓராண்டு கடந்த நிலையிலும், அடுத்த படம் குறித்த சிறு தகவல் கூட வெளிவராதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அஜித் தனது கார் பந்தயப் பயிற்சிகளிலும், 'அஜித்குமார் ரேசிங்' குழுவின் வெற்றிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இது ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், சினிமா அப்டேட்கள் இல்லாதது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

அஜித்தின் 64-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.