பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தீவிர ஆதரவாளர்களும் ரசிகர்களும் ஒன்றிணைந்து, 'தமிழக மக்கள் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இக்கட்சித் தொடக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியையும் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினர்.
கட்சிக் கொடியின் அம்சங்கள்: அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொடியில் மஞ்சள், வெள்ளை, சிகப்பு ஆகிய மூன்று வர்ணங்கள் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவே இரு சிறுத்தைகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்: கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கை பிரகடனம் மற்றும் அடுத்தகட்ட களப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு நடிகர் அஜித்குமாருக்கு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்து 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கி தற்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அஜித்குமாரின் ரசிகர்களும் தற்போது அரசியல் பாதையில் களம் இறங்கியுள்ளது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.





