தமிழகத்தில் த.வெ.க அரசு பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி வாக்குறுதி மீறல் ஆகியவற்றால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, த.வெ.க அரசைக் கண்டித்து வரும் ஜூன் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க சார்பில் விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

"நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், '5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், 'குறு விவசாயிகள் ரூ. 50,000-த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி; 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி' என்று அறிவித்து த.வெ.க அரசு விவசாயிகளைப் பச்சையாக ஏமாற்றி உள்ளது."

மேலும், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து சாடியுள்ள அவர், "மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே பொதுமக்கள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 19 - விழுப்புரத்தில் மாபெரும் போராட்டம்:

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை முன்வைத்து அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் விபரங்கள்:

  • நாள்: 19.06.2026 (வெள்ளிக்கிழமை)

  • நேரம்: காலை 10.00 மணி

  • இடம்: விழுப்புரம் நகராட்சி திடல் (புதிய பேருந்து நிலையம் அருகில்)

  • தலைமை: அ.தி.மு.க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இரா. பசுபதி

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.