தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) அதிமுக இணையும் என்று தொடர்ந்து பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இனியும் இதுபோன்று பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா போல கொள்கையின்றி பல கட்சிகளுக்கு ஓடுபவர்கள் அதிமுக தொண்டர்கள் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு ஓடுகாலியாகச் சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. அவருக்கென்று எந்த ஒரு தனித்தன்மையும் கிடையாது."

தொடர்ந்து பேசிய அவர், தவெகவை நோக்கிச் செல்பவர்களைக் கடுமையாக விமர்சித்தார். "புஸ்ஸி ஆனந்தை பார்ப்பதற்குத்தான் ஆட்டுக்கூட்டம் போல அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஓடுகிறார்கள்; அந்த கட்சியின் தலைவரைப் (விஜய்) பார்க்க அல்ல. அவர்கள் யாரும் ஜாம்பவான்கள் இல்லை. சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள். ஆதவ் அர்ஜுனாவுக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது" என்றார்.

"அதிமுக தொண்டனே ஜாம்பவான்"

தவெகவுடன் அதிமுக இணையும் என ஆதவ் அர்ஜுனா பேசி வருவது குறித்துக் குறிப்பிட்ட அவர், "தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசி வந்தால் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே ஜாம்பவான்தான். அந்த தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற ஓடுகாலிகள். உண்மையான ஜாம்பவான்கள் அனைவரும் அதிமுகவில்தான் உள்ளனர்" என்று கூறினார்.

2 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம்

லெட்டர் பேடை வைத்துக்கொண்டு ஏமாற்றும் கூட்டம்தான் அங்கே (தவெக) சென்றுள்ளது என்று சாடிய முனுசாமி, "தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக இருப்பதற்கு கடந்த 31 ஆண்டுகாலம் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம். அதிமுக என்பது தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட இயக்கம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து மாற்றுத் திறனாய்வுகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், கே.பி. முனுசாமியின் இந்த ஆவேசமான பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.