இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து இன்று நேரில் பெற்றுக்கொண்டார்.
கடந்த குடியரசு தினத்தன்று மம்மூட்டிக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மம்மூட்டி பத்ம பூஷண் விருதை மேடையில் பெற்றுக்கொண்ட போது, அரங்கில் இருந்த அவரது மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான், நெகிழ்ச்சியுடன் கைதட்டி தனது மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தினார். தந்தை விருது வாங்கும் போது மகன் ரசித்த இந்த நெகிழ்ச்சியான தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பன்மொழித் திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் மம்மூட்டி. சிறந்த நடிகராகத் வலம் வருவதுடன், தரமான மற்றும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்தும் வருகிறார்.
சமீபத்திய படங்கள்:
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான 'களம்காவல்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், வணிக ரீதியாக மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றது.
மோகன்லாலுடன் கூட்டணி:
இதனைத் தொடர்ந்து, மற்றொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் இணைந்து மம்மூட்டி நடித்த 'பேட்ரியாட்' திரைப்படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றதால், பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக சோபிக்கவில்லை.





