பெண்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்த தவெகவினரைக் கட்சியை விட்டே நீக்கியுள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதத்தின்போது உரையாற்றிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:
"பெண்கள் குறித்து யாரும் தவறாகப் பேசக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஒரு பெண் தலைவராக இதை நான் வரவேற்கிறேன்.
அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்துக் கொச்சையாகப் பதிவு செய்பவர்களில் தவெகவினரும் இருக்கிறார்கள். எனவே, முதல்வர் இதைக் கவனத்தில் கொண்டு தவெகவினரையும் கண்டிக்க வேண்டும்."
அமைச்சர்கள் விளக்கம்
பிரேமலதாவின் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்:
"முதல்வர் சொன்ன எச்சரிக்கை எங்கள் கட்சியினருக்கும் சேர்த்தேதான். பெண்கள் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஒரு சில திமுகவினர் தவெகவினர் பெயரில் போலி கணக்குகளை (Fake IDs) உருவாக்கி இதுபோன்ற பதிவுகளைச் செய்து வருகிறார்கள்."
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் என். ஆனந்த்:
"அவ்வாறு தவறு செய்த தவெகவினரைக் கண்டறிந்து, அவர்களைக் கட்சியை விட்டே நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.





