இன்னும் மூன்று மாதங்களில் கீழ்மட்டம் வரை உள்ள ஊழல்கள் மொத்தமாகத் தூக்கி எறியப்பட்டு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி மக்களுக்கு வழங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்
பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், தொலைநோக்குத் திட்டங்களையும் முன்வைத்துப் பேசினார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "எந்தவொரு அரசு திட்டத்திலும் அல்லது அரசு பணிகளிலும் ஒரு ரூபாய் அளவிற்குக் கூட ஊழல் இருக்காது. இன்னும் 2 முதல் 3 மாதங்களில் கீழ்மட்டத்தில் உள்ள ஊழல்கள் அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நேர்மையான நிர்வாகம் மக்களுக்கு உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், பெண் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை மட்டுமின்றி, அவர்கள் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வரை அனைத்துப் பொறுப்புகளையும் அரசே ஏற்றுத் தத்தெடுக்கும் என்றும், பெண்களுக்காகப் பிரத்யேக ஹாஸ்டல் வசதிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
"ஜவாது மலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். 15 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாக்கப்படுவது சமுதாயத்தின் மிகப்பெரிய குற்றம். இத்தகைய தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையின் மூலமாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்" என எச்சரித்தார்.
வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வேலை தேடி கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு அவதிப்பட்டுச் செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த ஊரிலேயே பணிபுரியும் வகையில் புதிய தொழிற்சாலைகளும் திட்டங்களும் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும், விவசாயிகள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், "மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட மாட்டாது. காவல்துறை அழுத்தத்தைக் கொண்டு எந்தவொரு நிலமும் கையகப்படுத்தப்படாது என விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கலாம்" என்று உறுதியளித்தார்.
தனிப்பட்ட உருக்கம் & திலகவதி IPS முன்மாதிரி
தனது உரையின் போது உணர்ச்சிவசப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தனது தாய் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டதால், வறுமையினாலும் குடும்ப சூழலினாலும் இளம் வயதிலேயே உயிரிழந்த சோகமான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.
அதேவேளையில், "படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போராடி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாகவும், பின்னர் டி.ஜி.பி-யாகவும் (DGP) உயர்ந்த எனது பெரியம்மா திலகவதி அவர்களின் வாழ்க்கையை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் அனைவரும் படித்து கலெக்டர், டாக்டர், இன்ஜினியர், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக உயர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இன்னும் சில ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முழுமையான வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்று கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.





