இருளோடிய வானத்தில் பதிந்துக்கிடக்கும் நிலாவைப் பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி துளிர்க்கும். வெறுந்தரையோ புல்வெளியோ எங்கிருந்து பார்த்தாலும் அதன் கொள்ளை அழகு மனதைக் குளிர்விக்கும். நிலாச் சோறு வாய்க்கப்பெறாத தலைமுறைக்கும்கூட அதன் உடனான பந்தம் இணக்கமாகவே இருப்பது ஆச்சரியம். நிலாவை ரசிக்க வானியல், விண்ணியல் எல்லாம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

சாமானியர் முதல் சர்வாதிகாரி வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கண்டு ரசிக்கும் அதிசய அற்புதம் நிலா. எத்தனையோ பேரின் நள்ளிரவுத் தனிமையைத் தூர்ந்துப் போகச் செய்வது, தேய்ந்து வளரும் தேன் நிலாதான். எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்த நிலவுக்கும் நமக்குமான இடைவெளியைக் குறைத்தது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் காந்தக் குரல்தான். அதனால்தான் அவர் என்றும் நமக்கு 'பாடும் நிலா பாலு'.

தமிழ் சினிமாவில் பாகவதர் காலந்தொடங்கி சாய் அபயங்கர் காலம் வரை ஆயிரக்கணக்கான நிலாப் பாடல்கள் வந்துவிட்டன. அவைகளில் நிலாவுக்கே பிடித்த பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி.

1969-ல் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானபோது பாலு, முதலில் 'சாந்தி நிலையம்' படத்தில் 'இயற்கை என்னும் இளையக் கன்னி' பாடலையும், இரண்டாவதாக 'அடிமைப்பெண்' படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' ஆகிய பாடல்களையும் பாடியிருந்தார். நிலவுக்குப் பிடித்தவர் என்பதாலோ என்னவோ, 'அடிமைப்பெண்' படம்தான் முதலில் வெளியானது. அதில் பாலு பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் தமிழகத்தின் பட்டித் தொட்டியெங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது.

தொடர்ந்து பல்வேறு பாடல்களைப் பாடி வந்த பாலு, 1977-ல் மேலும் இரு மறக்க முடியாத நிலாப் பாடல்களைப் பாடினார்:

  • 'நந்தா என் நிலா' (படம்: நந்தா என் நிலா) – வி.தக்ஷினாமூர்த்தி இசை.

  • 'வான் நிலா நிலா' (படம்: பட்டினப்பிரவேசம்) – எம்.எஸ்.வி. இசை.

அதிலும் 'வான் நிலா நிலா' பாடலை எஸ்பிபி பாடும் அழகே தனி. பாடல் முழுக்க அவரது குரலோடு இழையோடி வரும் அந்த சோலோ வயலினும்கூட ஒருகட்டத்தில் எஸ்பிபி குரலில் மயங்கிப் போயிருக்கும். பாடல் வரிகள் அனைத்தும் 'லா' என்ற எழுத்தில் முடியும்படி எழுதப்பட்டிருக்கும். எஸ்பிபி ஒவ்வொரு 'லா'-வுக்கும் வேரியேஷன் காட்டி ஈர்த்திருப்பார்.

இதன்பிறகு, இசைஞானி இளையராஜா காம்பினேசனில்தான் எஸ்பிபிக்கு எண்ணற்ற நிலாப் பாடல்கள் வெளிவந்தன.

1. இளைய நிலா பொழிகிறது (பயணங்கள் முடிவதில்லை)

இப்பாடல் தமிழ் இசையுலகில் சாகாவரம் பெற்றது. பட்டாம்பூச்சி ஒன்று நம் மேல் அமர்ந்து அதன் கொம்புகளால் ஸ்பரிசித்துவிட்டு பின், பறந்துச் செல்லும் உணர்வைத்தான் எஸ்பிபி இந்தப் பாடல் மூலம் நமக்கு கடத்தியிருப்பார். வான வீதியில், நீல வானிலே என வரும் இடங்களில் அவர் உச்சஸ்தாயி தொடும்போது இதயம் வரை நனைந்துப் போகவே செய்யும்.

2. நிலாவே வா (மௌன ராகம்)

பாட்டோட ஓப்பனிங்ல 'ஆஆஆஆ' என ஒரு ஹம்மிங் பாடுவார், அதைக் கேட்கும்போது சோகம் அப்பிக் கொண்ட ஒருவனது மன வலி வெளிப்பட்டிருக்கும். பின், 'நிலாவே வா' என பாடத் தொடங்கும் எஸ்பிபி, மனக் காயங்களை மயிலிறகால் வருடுவதைப்போல பல்லவியைப் பாடியிருப்பார்.

ராஜா-எஸ்பிபி கூட்டணியின் பிற மகுடங்கள்:

'நிலவு தூங்கும் நேரம்', 'நிலவொன்று கண்டேன்', 'பாடு நிலாவே', 'வா வெண்ணிலா', 'ஒரே நாள் உனை நான்', 'வெள்ளி நிலவே' உள்பட பல்வேறு பாடல்கள் இப்பட்டியலில் அடங்கும்.

3. நிலவே முகம் காட்டு (எஜமான்)

குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதியின் உணர்வுப்பூர்வமான ஆழ்மனக் கவலைகளை எஸ்பிபி - ஜானகி குரல் அச்சுப்பிசகாமல் கொட்டித் தீர்த்திருக்கும். இந்த ஜோடிக் குரல்கள் எத்தனையோ வித்தியாசமான பாடல்களைப் பாடி மகிழ்வித்திருந்தாலும், இந்தப் பாடலில் நம்மை உருக வைத்திருக்கும்.

பிற இசையமைப்பாளர்களுடன் பாடிய நிலாக்கள்

கங்கை அமரனின் இசையில் 'நீலவான ஓடையில்' (படம்: கோழி கூவுது), எஸ்பிபியின் சொந்த இசையில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' (படம்: சிகரம்) என பாலு பாடிய அனைத்து நிலா பாடல்களுமே மனதை வருடுபவைதான்.

ஒவ்வொரு முறை நிலா பார்க்கும்போது நம் மனம் எப்படி மகிழ்வுறுகிறதோ, அதுபோலத்தான் எஸ்பிபி பாடிய நிலாப் பாடல்களும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனதை அமைதி கொள்ளச் செய்யும். நிலா பார்க்கும் போதெல்லாம் நம் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலாப் பாடல்களின் வழியே எஸ்பிபியின் குரல் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும்...