தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த மர்மங்கள் விலகி, அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்பதற்கான ஆயத்தங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை மற்றும் பட்டினப்பாக்கம் இடையே அரசியல் நகர்வுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டிருந்த நிலையில், ஆளுநர் மாலை 7 மணிக்கு கேரளா புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்ட விஜய், இடையில் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பட்டினப்பாக்கம் இல்லத்திற்கே திரும்பினார்.
ஆனால், விஜய் தனது வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே, ஆளுநரின் கேரள பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து, விஜய் மீண்டும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10-ஆம் தேதியுடன் (நாளை) நிறைவடைகிறது. இதனால் உடனடியாகப் புதிய அரசு அமைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திட்டம் 1: ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தால், ஞாயிற்றுக்கிழமை (மே 10) பிற்பகல் 3 மணிக்கு விஜய் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திட்டம் 2: அரசியல் நடைமுறைகள் மற்றும் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு காரணமாக, திங்கள்கிழமை (மே 11) பதவியேற்பு விழா நடைபெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் விஜய், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களை உடன் அழைத்துச் சென்றுள்ளார். 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பித்து, பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
"விஜய் மட்டும் தனியாகப் பதவியேற்பாரா அல்லது முழு அமைச்சரவையும் அவருடன் பதவியேற்குமா?" என்பதுதான் இப்போது தமிழக மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

