அமெரிக்காவில் தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு குடியேற்றக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரக் குடியேற்றக் கொள்கை மாற்றமே இந்த நடவடிக்கைக்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றி வரும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்றப் பாதுகாப்புகள் மற்றும் சலுகைகளை ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் ரத்து செய்தது.

நாடு கடத்தப்பட்ட குடும்பத்தினர்

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது 6 பேர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் மத்திய குடியேற்றக் காவல்துறையின் (ICE) காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தினர் இடையே கொந்தளிப்பு

ஈரானுடன் அமெரிக்கா கடுமையான போர்ப் பதற்றத்தில் இருக்கும் இந்தச் சூழலில், எல்லைப் பகுதியில் அல்லது வெளிநாடுகளில் தாய்நாட்டிற்காகப் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்படுவது அவர்களின் மனவுறுதியையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளையில், அமெரிக்க ராணுவத்தில் புதிய வீரர்களைச் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ விளம்பரங்களில், "ராணுவத்தில் இணைந்தால் குடும்பத்தினருக்குக் குடியேற்றச் சலுகைகள் வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இன்னமும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முரண்பாடான நடவடிக்கை அமெரிக்க மக்களிடையேயும் ராணுவ குடும்பங்களிடையேயும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.