மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்கா இன்று வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுமுறைப் பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, புது தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனை உறுதிப்படுத்தினார். "அடுத்த சில மணி நேரங்களில், உலகிற்குச் சில நல்ல செய்திகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நான் நம்புகிறேன்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் இந்த புதிய ஒப்பந்தத்தின் முக்கிய இலக்குகள் குறித்து மார்கோ ரூபியோ விவரித்ததாவது:
அணு ஆயுத அச்சத்திற்கு முற்றுப்புள்ளி: அமெரிக்க அதிபரின் விருப்பப்படி, ஈரானின் அணு ஆயுதங்களைக் கண்டு உலக நாடுகள் அச்சப்படத் தேவையில்லாத நிலை இதன் மூலம் உருவாக்கப்படும்.
யுரேனியம் ஒப்படைப்பு: ஈரான் தங்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) எவ்விதக் கட்டணமும் இன்றி, சுதந்திரமான கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ரூபியோவின் தற்போதைய கருத்துக்கள் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
மறுபுறம், சர்வதேச பொருளாதாரத் தடைகளின் கீழ் முடக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டு நிதியில் ஒரு பகுதியை விடுவிக்கவும், ஈரான் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில காலங்களாக மேற்காசியப் பகுதியில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் மோதல், இந்த புதிய அமைதி ஒப்பந்தத்தின் மூலம் சுமுக முடிவுக்கு வரும் என உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

