ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பயணம் என்பது பெரும் பணக்காரர்களின் கனவாக மட்டுமே இருந்தது. சர்வதேச விமானக் கட்டணங்கள், விசா செலவுகள், அதிக விலை ஹோட்டல்கள் போன்ற காரணங்களால் நடுத்தர மக்களுக்கு அது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் குறைந்த கட்டண விமான சேவைகள், டிஜிட்டல் முன்பதிவு வசதிகள் மற்றும் சாதகமான நாணய மாற்று விகிதங்கள் ஆகியவை சர்வதேசப் பயணத்தை சாமானியர்களுக்கும் எளிதாக்கியுள்ளன.

நும்பெய வாழ்க்கைச் செலவுக் குறியீடு (Numbeo Cost of Living Index 2026), உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா நிபுணர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டில் குறைந்த செலவில் நிறைந்த அனுபவத்தைத் தரும் உலகின் டாப் 10 சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ:

1. வியட்நாம் (Vietnam)

2026-ஆம் ஆண்டின் மிகவும் மலிவான மற்றும் அதிக மதிப்புமிக்க சுற்றுலாத் தலமாக வியட்நாம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தலைநகர் ஹனோயின் பழமையான தெருக்கள், ஹா லாங் வளைகுடா, ஹோ சி மின் நகரம் ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாகும். உலகப் புகழ்பெற்ற 'ஃபோ' நூடுல்ஸ் சூப், 'பான் மீ' சாண்ட்விச் போன்ற உணவுகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து நேரடி விமானங்கள் அதிகரித்துள்ளதால் இது இந்தியர்களின் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

2. இந்தோனேசியா (Indonesia)

பாலி தீவு மட்டுமின்றி லொம்போக், யோக்யகார்த்தா, கோமோடோ போன்ற 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் இங்குள்ளன. எரிமலைகள், பவளப்பாறைகள், கடற்கரைகளை குறைந்த செலவில் ரசிக்க முடியும். உள்ளூர் உணவகங்களில் பாரம்பரிய உணவுகள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

3. நேபாளம் (Nepal)

இந்தியக் குடிமக்களுக்கு விசா தேவையில்லை என்பது இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். காத்மாண்டு, பொக்காரா, எவரெஸ்ட் மலைத்தொடர்கள் என இயற்கை மற்றும் ஆன்மிக அனுபவங்கள் நிறைந்த நாடு. குறைந்த விலை விடுதிகள் மற்றும் பகிரப்பட்ட பேருந்து வசதிகள் பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்றவை.

4. கம்போடியா (Cambodia)

பழமையான அங்கோர் வாட் கோயில் வளாகம், புனோம் பென், டோன்லே சாப் மிதக்கும் கிராமங்கள் ஆகியவை இதன் முக்கிய அடையாளங்கள். தங்குமிடம், போக்குவரத்து மற்றும் உணவு அனைத்தும் மலிவு விலையில் கிடைப்பதால், குடும்ப சுற்றுலாவிற்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.

5. ஜார்ஜியா (Georgia)

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள ஜார்ஜியா, பேக்பேக்கர்களின் சொர்க்கமாக உருவெடுத்துள்ளது. தலைநகர் திபிலிசியின் பழமையான கட்டிடங்கள் மற்றும் காகசஸ் மலைத்தொடரின் காட்சிகள் பயணிகளை கவர்கின்றன. இந்தியர்களுக்கு எளிய விசா நடைமுறைகள் இருப்பது கூடுதல் சாதகம்.

6. ஆர்மீனியா (Armenia)

ஐரோப்பாவின் மறைந்திருக்கும் சுற்றுலா பொக்கிஷமான இங்கு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மடாலயங்களும், பசுமையான மலைப்பகுதிகளும் உள்ளன. தலைநகர் யெரெவானில் குறைந்த விலை ஹோட்டல்களும், தரமான உணவகங்களும் நிறைந்துள்ளன.

7. லாவோஸ் (Laos)

அமைதியை விரும்பும் பயணிகளுக்கான சொர்க்கம். உலக பாரம்பரிய தளம் லுவாங் பிரபாங், குவாங் சி நீர்வீழ்ச்சி, மேகாங் நதிப் படகுப் பயணம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு என்பதால் நீண்ட நாட்கள் தங்கி ரசிக்கலாம்.

8. கஜகஸ்தான் (Kazakhstan)

மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான இங்கு, நவீன நகரமான அஸ்தானா, கலாச்சார நகரமான அல்மாட்டி, சாரின் பள்ளத்தாக்கு ஆகியவை ஈர்ப்புகளாக உள்ளன. பொதுப் போக்குவரத்து மற்றும் அருங்காட்சியக நுழைவுக் கட்டணங்கள் மிக மலிவு.

9. பொலிவியா (Bolivia)

தென் அமெரிக்காவின் மிக மலிவான நாடு. உலகப் புகழ்பெற்ற சலார் டி உயுனி உப்புப் பாலைவனம், டிடிகாக்கா ஏரி ஆகியவை சாகசப் பயணிகளையும், புகைப்பட ஆர்வலர்களையும் பெரிதும் ஈர்க்கின்றன.

10. இலங்கை (Sri Lanka)

இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கை, குறைந்த செலவில் சர்வதேச பயணம் செய்ய சிறந்த இடமாகும். கொழும்பு, கண்டி, நுவரெலியா, சிகிரியா போன்ற இடங்கள் இயற்கை மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்குகின்றன. விமான பயண நேரம் குறைவு என்பதுடன், இந்தியப் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப செலவுகளும் கட்டுப்படியாகும்.

பயணத்திற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலத்தை (Validity) சரிபார்க்கவும்.

  • விசா விதிமுறைகள், பயணக் காப்பீடு (Travel Insurance) மற்றும் அந்நியச் செலாவணி மாற்று விகிதங்களை முன்கூட்டியே ஆராயவும்.

  • விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்கூட்டியே பதிவு செய்வதன் மூலம் பெரும் தொகையை மிச்சப்படுத்தலாம்.

சரியான திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனமான செலவுக் கட்டுப்பாட்டுடன், இந்த 10 நாடுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, உங்கள் வெளிநாட்டுப் பயணக் கனவை இந்த ஆண்டே நனவாக்குங்கள்!