தமிழகத்தில் முதல்வர் ஜோசப் சி. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியின் அமைச்சரவை இன்று (மே 21) அதிரடியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இருப்பினும், கடந்த முறையைப் போலவே இந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலுடன் விழா தொடங்கியது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடியது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. "இனிவரும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்" என்று தவெக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய விழாவிலும் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இன்றைய அமைச்சரவை விரிவாக்க விழாவும் 'வந்தே மாதரம்' பாடலுடனேயே தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால், கூட்டணி கட்சிகளுக்குள்ளும், தமிழ் ஆர்வலர்களிடமும் இந்த விவகாரம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக); காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10-ஆம் தேதி முதற்கட்டமாக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று 23 பேர் கொண்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் மிக முக்கியமாக, சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய விழாவில், புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
முதல் நபராக: தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவும், முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து: கமலி, விஜயலட்சுமி, வினோத், ராஜீவ், ரஞ்சித்குமார், விஜய் பாலாஜி, மதன்ராஜா, காந்திராஜ், பார்த்திபன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 23 பேருக்கும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன், புதிய அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் ஜோசப் சி. விஜய்யிடம் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துப் பெற்றனர். அமைச்சரவை விரிவாக்கம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

