அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது ஆரோக்கியமான அரசியல் கிடையாது என்றும், இது தவெக-வின் நம்பகத்தன்மையைக் கெடுத்துவிடும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் குன்னத்தில் நடந்த திமு-விசிக மோதல் குறித்துப் பேசிய விவரங்கள் வருமாறு
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவது குறித்து திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"யார் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், அவர்களை உடனடியாகக் கட்சியில் இணைத்துக் கொள்வது தவெக-வின் நம்பகத்தன்மையைப் பெருமளவில் பாதிக்கச் செய்யும். இதனை ஒரு ஆரோக்கியமான அரசியலாகக் கருத முடியாது. எனவே, தவெக தலைமை இதற்கு எந்த வகையிலும் ஊக்கமளிக்கக் கூடாது. இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் தவெக தலைமை நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
அதிமுக இதுபோன்றதொரு கடுமையான நெருக்கடிச் சூழலைச் சந்திக்கும் என்று தேர்தலுக்கு முன்பே நான் எச்சரித்திருந்தேன். பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த காரணத்தால்தான், அவர்களின் ஆதரவைப் பெறுவதில் தவெக-வுக்குத் தயக்கமும் நெருடலும் இருந்ததாக அக்கட்சியின் தலைவர்கள் முன்பு கூறியிருந்தனர். ஒருவேளை, பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்து நின்றிருந்தால், தவெக அவர்களின் ஆதரவை நாடியிருக்கும்."
தவெக அரசுக்கான விசிக-வின் ஆதரவு மற்றும் புதிய அமைச்சரவையில் தலித் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறித்துப் பேசிய அவர்:
"தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே தவெக அரசுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்கினோம். தவெக-வின் அழைப்பை ஏற்று விசிக தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. எந்தவொரு சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்ந்துவிட நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். 'நாம் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் நீடிப்போம்' என்ற அந்த நம்பிக்கையோடு தவெக தலைமை மற்றும் நிர்வாகிகள் ஆட்சியைத் திறம்பட நடத்த வேண்டும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே தலித் சமூகத்தினருக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அந்தச் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற திமுக - விசிக இடையேயான மோதல் சம்பவம் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிப்பதாகத் திருமாவளவன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு விசிகவினர் யாரும் உணர்ச்சிவசப்பட்டு வீணாக எதிர்வினை ஆற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். குன்னத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே கேள்விப்பட்டு, அதனைத் தவிர்க்குமாறு நான் அறிவுறுத்தியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் இல்லை என்பதை உணர்ந்து தவிர்த்துவிட்டனர்.
ஆனால், சரியான தகவல் சென்றடையாத சில விசிக தொண்டர்களும், திமுகவைச் சேர்ந்தவர்களும் அங்கே திரண்டதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டன. இனிவரும் காலங்களில் இத்தகைய மோதல் சம்பவங்கள் முற்றிலும் களையப்பட வேண்டும்; விசிக தோழர்கள் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது" என்று அறிவுறுத்தினார்.

