மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து, உலகின் மிக முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் முதல்முறையாக வெற்றிகரமாக ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: ஓமனின் கஸாப் பகுதிக்கு வடகிழக்கே 46 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த 'லூயிஸ் 1' என்ற பனாமா நாட்டு எண்ணெய் கப்பலைச் சிறிய படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வளைத்தனர். அக்கப்பலின் மீது இரண்டு லிம்பெட் மைன் வெடிகுண்டுகளைப் பொருத்தித் தாக்குதல் நடத்தினர். இதில் என்ஜின் அறையில் தீப்பற்றி கப்பல் தற்காலிகமாகச் செயலிழந்தது. எனினும், தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கப்பல் அடுத்த துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது. மாலுமிகள் யாருக்கும் காயமில்லை.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேவேளையில், அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன் தங்களின் அனுமதியின்றி மாற்றுப் பாதையில் செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

டெஹ்ரானில் கத்தார் அமைதி தூதுக் குழு: அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் நாடு மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கத்தார் வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமரின் மூத்த ஆலோசகர் தலைமையிலான தூதுக்குழு வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்று ஈரானிய உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியது. முன்னதாக கத்தார் அளித்த அமைதித் திட்ட வரைவை ஈரான் நிராகரித்திருந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

மெக்கா தாக்குதல் குற்றச்சாட்டு - ஹூதிக்கள் விளக்கம்: இதனிடையே, சவூதி அரேபியாவின் மெக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ட்ரோனை இடைமறித்து அழித்ததாகச் சவூதி அரசு தெரிவித்த குற்றச்சாட்டை யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். "நாங்கள் சவூதியின் எண்ணெய் நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைக்கிறோம்; இஸ்லாமியர்களின் புனித நகரங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை" என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.