ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவு தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலைப் பெறுவதற்காக ஈரான் காத்திருக்கிறது. அதேவேளையில், தன் நிலைப்பாட்டை வலுப்படுத்த மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பு: ஈரான் அளித்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே நிராகரித்துவிட்டார். இருப்பினும், வரும் நாள்களில் அமெரிக்காவிடமிருந்து அதிகாரப்பூர்வப் பதில் வரும் என்று எதிர்பார்ப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
சமீப நாள்களில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகப் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்றாலும், ஹோர்முஸ் நீரிணை வழியேச் செல்லும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. மறுபுறம், அமெரிக்கா நேரடி ராணுவ நடவடிக்கைக்குப் பதிலாகக் கடுமையான பொருளாதார அழுத்தப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
"யாருக்கும் பாதுகாப்பு இருக்காது" - ஈரான் அச்சுறுத்தல்: ஈரானின் பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டின் உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃ எச்சரித்துள்ளார்.
இது குறித்து வெளியாகி உள்ள காணொலி ஒன்றில் பேசிய அவர், "நம்மால் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு எந்த நாட்டினாலும் அதைச் செய்ய முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், புதிய தாக்குதல்களை முன்னெடுக்கவும் ஈரான் தயங்காது என அச்சுறுத்தியுள்ளார்.
டிரம்ப் இந்த முன்மொழிவை நிராகரித்த பின்னரும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு சுமூகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சர்வதேச மத்தியஸ்த நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.





