உலகளாவிய விமான போக்குவரத்துத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'ஸ்கைட்ராக்ஸ்' (Skytrax) விருதை, சிங்கப்பூரின் சாங்கி வானூர்தி நிலையம் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளது. இதன் மூலம், உலகின் சிறந்த வானூர்தி நிலையம் என்ற பெருமையை, இதுவரை மொத்தம் 14 தடவைகள் தமதாக்கிக் கொண்டு, மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

ஒரு வானூர்தி நிலையம் என்பதைத் தாண்டி, பயணிகளுக்கு ஒரு புதிய உலகத்தையே காட்டும் வகையில் சாங்கி வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுழையும் பயணிகள், ஏதோ ஒரு மேம்பட்ட எதிர்கால நகரத்திற்குள் நுழைந்த உணர்வைப் பெறுகிறார்கள்.

நீண்ட நேர வானூர்திப் பயணத்திற்குப் பிறகு சோர்வடைந்து வரும் பயணிகளை வரவேற்க, புன்னகைக்கும் முகத்துடன் கூடிய தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) துப்புரவாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இவை அதிநவீன முறையில் தரையைச் சுத்தம் செய்து, தூய்மையைப் பராமரிக்கின்றன.

பயணிகளின் நேரத்தைச் சேமிக்கும் நோக்கில், வெறும் 15 நிமிடங்களுக்குள் குடிவரவுச் சோதனைகளை நிறைவு செய்து வெளியேறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காத்திருக்கும் நேரத்தைச் சிறந்த முறையில் கழிப்பதற்காக 24/7 இயங்கும் இலவசத் திரையரங்கம், கண்கவர் வண்ணத்துப்பூச்சித் தோட்டம் மற்றும் உலகின் மிக உயரமான உள்ளரங்க நீர்வீழ்ச்சி ஆகியவை பயணிகளைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

  • நடைபாதைகளில் உள்ளரங்கக் கண்ணாடி மீன் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வானூர்தி நிலையத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திரைகள், வெளிப்புற வானிலையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன வசதிகளும், பயணிகளை மையப்படுத்திய சிறப்பான சேவைகளும் ஒருங்கிணைந்ததே, சாங்கி வானூர்தி நிலையத்தை உலகத் தரத்தில் முதலிடத்தில் தக்கவைத்திருக்கக் காரணமாக அமைந்துள்ளது.