மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, போலந்து நாட்டில் ரோபோக்களே வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட விசித்திரமான சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்பு: போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள டிஜிட்டல் விவகாரத் துறை மத்திய அரசு அலுவலக வாயிலில் இந்த வினோதப் போராட்டம் நடைபெற்றது. 'ஜனநாயகம்' (Democracy) என்ற தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றன.

  • பல்வேறு வகையான ரோபோக்கள்: அகிபோட் ஏ3 (Agibot A3) ரக செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள், இரு கால்களால் நடக்கும் மனித உருவ ரோபோக்கள் மற்றும் நாய் வடிவ நான்கு கால் ரோபோக்கள் எனப் பலதரப்பட்ட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.

  • கொடிகள் மற்றும் முழக்கங்கள்: கைகளில் கொடிகளைப் பிடித்துக்கொண்டு வட்டமாகச் சுற்றி வந்த இந்த ரோபோக்கள், ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பின.

போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள்: செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்திப் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

"பணியிடங்களைப் பாதுகாப்போம்!" "AI பயன்பாட்டிற்கான விதிமுறைகளை வகுக்க இதுவே சரியான நேரம்!" "காத்திருக்க வேண்டாம், உடனடியாக ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துங்கள்!"

மாற்றி யோசித்த ஏற்பாட்டாளர்கள்: தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களும் AI தொழில்நுட்பமும் ஆக்கிரமித்து வருவதால் ஏற்படுகி்ன்ற வேலைவாய்ப்பிழப்பு என்பது எதிர்காலப் பிரச்சனை அல்ல; அது ஏற்கனவே தொடங்கிவிட்ட ஒரு கொடுங்கனவு என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த நடவடிக்கை என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் போராடினால் பலரின் கவனத்தைப் பெற முடியாது என்பதால், உலக நாடுகளின் பார்வையை ஈர்க்கவே செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களையே போராட வைத்ததாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தற்போது இந்த ரோபோக்களின் போராட்ட விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், AI தொழில்நுட்பக் கட்டுப்பாடு குறித்த புதிய விவாதத்தை இது தோற்றுவித்துள்ளது.