சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் அருகே சனிக்கிழமை பெரும் வெடிச்சத்தங்களைத் தொடர்ந்து, அடர்ந்த கரும்புகையும் தீப்பிழம்புகளும் வானுயர எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், தலைநகர் ரியாத் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள அல்-கார்ஜ் நகரங்களுக்கு வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதாக சவூதி சிவில் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பியது.

எரிபொருள் கிடங்கு அருகே புகைமண்டலம்: சனிக்கிழமை காலையில் அபாயம் நீங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. இதன் தொடர்ச்சியாக, ரியாத் நகர விமான நிலைய நெடுஞ்சாலை மற்றும் முதன்மை முனையக் கட்டடங்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள எரிபொருள் கிடங்குகள் பகுதியில் பெரும் கரும்புகை மண்டலம் உருவானது. இச்சம்பவம் குறித்து சவூதி அரசு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

ஹூதிகளின் தொடர் தாக்குதல்: யேமனின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதிக்கள், சவூதி அரேபியாவின் கப்பல்கள், நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். செங்கடல் பகுதியில் தொடரும் இத்தாக்குதல்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

காஸாவில் போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி

காஸா: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில், காஸா சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் முனிர் அல்-புர்ஷின் மகன் பசிர் அல்-புர்ஷ் உட்பட 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், அதை மீறி இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.