ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு சட்டமாக்கியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று கீழவையிலும் (பிரதிநிதிகள் அவை) பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இம்மசோதாவில் அதிபர் டிரம்ப் இன்று கையொப்பமிட்டுள்ளார்.
பின்னணி:
உக்ரைன் - ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. அதேவேளையில், ரஷியாவின் பொருளாதார ஆதாரமான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்து வருகிறது.
இருப்பினும், மேற்காசியாவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலால் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது.
'லிண்ட்சே ஓ கிரஹாம்' சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
தற்போது 'லிண்ட்சே ஓ கிரஹாம்' (Lindsey Graham) மசோதா சட்டமாகியதன் மூலம் அமெரிக்க அதிபருக்குப் பின்வரும் அதிகாரங்கள் கிடைத்துள்ளன:
100% அபராத வரி: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்க முடியும்.
கூடுதல் தடைகள்: ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
ரஷிய எரிசக்தித் துறைக்குக் கட்டுப்பாடு: ரஷியத் தலைமை, அந்நாட்டின் எரிசக்தித் துறை மற்றும் மறைமுகமாகக் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படும் கப்பல்கள் மீது நேரடியாகத் தடை விதிக்க முடியும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று, அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்தச் சட்டம், சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்திலும், உலக நாடுகளின் பொருளாதாருறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





