அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வட கொரியா தனது 2-ஆவது அதிநவீன போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து தனது ராணுவ பலத்தை நிரூபித்துள்ளது.
அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட 5,000 டன் எடையுள்ள ‘காங் கான்’ (Kang Kon) என்ற இந்த போர்க்கப்பலை, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளுடன் வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சேவையில் இணைத்து வைத்தார்.
'ஃப்ரீடம் எட்ஜ்' கூட்டு ராணுவப் பயிற்சி:
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையாக, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 'ஃப்ரீடம் எட்ஜ்' (Freedom Edge) என்ற 5 நாள் முத்தரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியைத் தென்கொரியாவின் ஜெஜு தீவுப் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வடகொரியா இந்த போர்க்கப்பலைத் திறந்துள்ளது.
ரஷியா - வடகொரியா இடையிலான முதல் சாலைப் பாலம் திறப்பு:
மற்றொரு முக்கிய நிகழ்வாக, ரஷியா மற்றும் வடகொரியாவைப் பிரிக்கும் துமென் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 1 கி.மீ. நீளமுள்ள முதல் சாலைப் பாலம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
போக்குவரத்து வசதி: இரு வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 300 வாகனங்கள் எல்லையைக் கடக்க முடியும்.
கூட்டணி வலுப்பெறும்: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் படைகளை வழங்கி வடகொரியா ஆதரவளித்து வரும் சூழலில், இப்புதிய பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பன்மடங்கு வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





