நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட முக்கிய சாலை இணைப்புகளை மீட்க, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடமும் தற்காலிகப் பாலங்களை (Bailey Bridges) நேபாள அரசு கோரியுள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன.
1,300-க்கும் மேற்பட்டோர் பலி: தொடரும் தேடுதல் வேட்டை
வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 1,355 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் 589 பேர் உட்பட மாயமான சுமார் 5,000 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுவரை மொத்தம் 13,396 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய நேபாளம் முழுவதும் வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
ரூ.50 பில்லியன் புனரமைப்புச் செலவு:
சாலை மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு நேபாள ரூபாயில் 30 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவற்றை முழுமையாகப் புனரமைக்க சுமார் 50 பில்லியன் நேபாள ரூபாய் செலவாகும் என சாலைகள் துறை தெரிவிக்கிறது.
பாலங்கள் சேதம்: ரசுவா - சித்வன் இடையே இருந்த 41 மோட்டார் வாகனப் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 4 பாலங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள 63 பாலங்களில் 18 மட்டுமே தப்பியுள்ளன.
போக்குவரத்து துண்டிப்பு: நுவாகோட்டுடனான சாலை இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபுர்கே கோலாவில் இருந்த கான்ஃக்ரீட் பாலம் அடித்துச்செல்லப்பட்டதால், தாடிங்பேசி - பிருத்வி நெடுஞ்சாலை இடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா உதவி:
நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று தற்காலிக பெய்லி பாலங்களை வழங்க இந்தியாவும் சீனாவும் சாதகமாகப் பதிலளித்துள்ளன.
சீனா ஏற்கெனவே முஸ்டாங்கில் உள்ள கோரலா எல்லைப் பகுதிக்கு இரண்டு 100 மீட்டர் நீளமுள்ள பெய்லி பாலங்களை அனுப்பியுள்ளது. அதேபோல, இந்தியாவும் பெய்லி பாலங்களை வழங்க முன்வந்துள்ளது. நுவாகோட்டில் உள்ள தேவிகாட்டில் நேபாள ராணுவம் அக்ரோ பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இருப்பினும், பெய்லி பாலங்கள் கையிருப்பில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல சாலை வசதிகள் இல்லாதது சீரமைப்புப் பணிகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.





