"தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகள் மட்டுமின்றி, அடுத்த 15, 20 ஆண்டுகள் ஆனாலும் விஜய்தான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார்" என்று தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்த் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'பிக்கில்பால்' (Pickleball) விளையாட்டுத் திடலின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர் என். ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திடலைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில அதிமுக மாநிலச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகனும் உடனிருந்தார்.
"விசுவாசத்தை மாற்றக் கூடாது" – அன்பழகன் பேச்சு
நிகழ்ச்சியில் முதலில் பேசிய அதிமுக நிர்வாகி அன்பழகன், அமைச்சர் என். ஆனந்தின் அரசியல் விசுவாசத்தைப் பாராட்டிப் பேசினார். அவர் குறிப்பிட்டதாவது:
"ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அமைச்சர் ஆனந்தின் அசைக்க முடியாத விசுவாசம்தான் அவரை இன்று இந்த உயரிய இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது. அதேபோல், பிற கட்சிகளில் விசுவாசமாக இருப்பவர்களை மனம் மாற்றாமல், தங்கள் பக்கமே வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன்."
"ஒழுங்காக நடத்தாததால் தான் எங்களிடம் வருகிறார்கள்" – அமைச்சர் பதிலடி
அன்பழகனின் இந்த கருத்துக்கு மேடையிலேயே பதிலளித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், மாற்று கட்சியினர் தங்கள் கட்சிக்கு வருவதற்கான காரணத்தை விளக்கினார். "உங்கள் கட்சியில் உள்ளவர்களை நீங்கள் சரியாக வைத்திருந்தால், அவர்கள் ஏன் இன்னொரு இடத்திற்குச் செல்லப் போகிறார்கள்? நீங்கள் அவர்களை ஒழுங்காக நடத்தாத காரணத்தினால்தான், எந்த இடம் நல்ல இடம், எந்த இடம் ஊழல் இல்லாத இடம் என்று பார்த்துத் தெரிந்துகொண்டு அவர்கள் எங்களிடம் வருகின்றனர்" என்று கூறினார்.
"நான் அமைச்சரானதற்கு விஜய்தான் காரணம்"
தொடர்ந்து தனது அரசியல் வளர்ச்சி குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் குறித்தும் அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சியுடன் பேசினார்:
விஜய்க்காக விழுந்த வாக்குகள்: "கடந்த தேர்தலில் எனது தொகுதியில் நான் வெறும் 4 நாட்கள் மட்டும்தான் பிரசாரம் செய்தேன். எனக்காக யாரும் ஓட்டுப் போடவில்லை. அங்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் விஜய்க்காக விழுந்த ஓட்டுகள்."
சாதாரண மனிதனுக்கு வாய்ப்பு: "புதுச்சேரியில் சாதாரண ஒரு இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை இன்று அமைச்சராக உட்கார வைத்திருக்கிறார் என்றால், அதற்கு தமிழ்நாடு முதல்வர் விஜய்தான் காரணம்."
20 ஆண்டுகள் அவரே முதல்வர்: "தமிழ்நாடு முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நாங்கள் அப்படியே செய்து வருகிறோம். எந்தவொரு தவறும் செய்யாமல் எங்களுடைய ஆட்சி தமிழ்நாட்டில் நேர்மையாகத் தொடரும். 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்தான் நீடிப்பார்," என்று அவர் மேடையில் முழங்கினார்.
மாற்றுக்கட்சித் தலைவர்கள் முன்னிலையிலேயே, தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய்தான் முதலமைச்சர் என்று அமைச்சர் என். ஆனந்த் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

