அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஈரான் செல்லவுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்த போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மறைந்த தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் அண்டை நாடான பாகிஸ்தான் சார்பில் உயர்மட்டக் குழு பங்கேற்கிறது. இதற்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஈரானிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன:
ஜூலை 4: தலைநகர் தெஹ்ரானில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் மற்றும் அஞ்சலி கூட்டங்கள் தொடங்குகின்றன.
ஜூலை 9: கமேனியின் பிறந்த ஊரும், ஈரானின் புனித நகரமுமான மஷாதில் (Mashhad) அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஈரானிய ஆன்மீகத் தலைவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்திய அரசின் சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பிகார் மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





