பிரஸ்ஸல்ஸ்: ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை (Air Defence) வலுப்படுத்துவதற்காக ரூ. 68,000 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஆதரவை அதிகரிப்பது தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா உரை: இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பேசுகையில்:
"உக்ரைனின் சுதந்திர நாளான இன்று அவர்களுக்கு எங்களின் உறுதியான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். உக்ரைனுக்குத் தற்போதைய முக்கியத் தேவையாக உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ரேடார்களுக்காக ரூ. 68,000 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது"
எனக் கூறினார்.
376 ஏவுகணைத் தாக்குதல்கள்: ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது 376 ஏவுகணைத் தாக்குதல்களை ரஷியா நடத்தியுள்ளது. எனவே, உக்ரைனின் பாதுகாப்பை உடனடியாக வலுப்படுத்துவது மிக முக்கியத் தேவையாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவியின் பின்னணி:
இந்த நிதி, உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 90 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியாகும்.
இதில் ராணுவ உதவிக்காக மட்டும் 60 பில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதில் 16 பில்லியன் யூரோக்கள் பிரத்யேகமாகப் பிரிக்கப்பட்டு, அதில் 8.5 பில்லியன் யூரோக்கள் உக்ரைனுக்கு முன்னரே அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பேட்ரியாட் ஏவுகணைகள் வாங்கத் திட்டம்: ரஷியாவின் தொடர் தாக்குதல்களை முறியடிக்க, குறிப்பாக அமெரிக்க தயாரிப்பான 'பேட்ரியாட்' (Patriot) ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் நவீன ஆயுதங்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.





