தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பைத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று வழங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை அடையவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், இன்று 4-ஆவது முறையாகத் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகள், நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தவெக-வுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான அரசுக்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது.

