ஐபிஎல் (IPL 2027) தொடரின் அடுத்த சீசனுக்காக தில்லி கேபிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர்கள் குழுவை முற்றிலும் மாற்றி அமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இலங்கை அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ், தில்லி அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பயிற்சியாளர்கள் குழு விவரம்:
அடுத்த சீசனில் புதிய மாற்றங்களுடன் களம் காண திட்டமிட்டுள்ள தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் விவரம்:
தலைமைப் பயிற்சியாளர்: சௌரவ் கங்குலி
பேட்டிங் / உதவிப் பயிற்சியாளர்: யுவராஜ் சிங்
வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்: சமிந்தா வாஸ்
சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்: அமித் மிஸ்ரா
சமிந்தா வாஸின் அனுபவம்:
இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான 52 வயதான சமிந்தா வாஸ், டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் 3 சீசன்களில் (2008-2010) டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.
2012 முதல் 2022 வரை இலங்கை தேசிய அணி, அயர்லாந்து மற்றும் பல்வேறு லீக் தொடர்களில் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா:
42 வயதான முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக ஹேட்ரிக் (3 முறை) எடுத்த சாதனையை தன்வசம் வைத்துள்ள இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
கடந்த இரு சீசன்களாக ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராகவும், முனாஃப் படேல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய பயிற்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டு வருகிறது. சமிந்தா வாஸ் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய இருவருமே ஏற்கனவே டெல்லியில் நடைபெற்று வரும் பயிற்சிகளில் கலந்துகொண்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.





