இந்தியப் பெருங்கடலின் ஆழ்க பகுதியில், பூமியின் மிக ஆழமான மற்றும் மிக விரிவான "திமிங்கல இடுகாடு" (Whale Graveyard) ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. சுமார் 53 லட்சம் ஆண்டுகள் பழமையான புதைபடிவங்களைக் கொண்டுள்ள இந்த தளம், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பற்றிய தற்போதைய அறிவியல் புரிதலை முற்றிலும் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ‘நேச்சர்’ (Nature) மற்றும் ‘தி கார்டியன்’ (The Guardian) இதழ்களில் இந்த ஆய்வு முடிவுகள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
கடலில் வாழும் திமிங்கலங்கள் மரணமடைந்த பிறகு, அவற்றின் உடல்கள் கடலின் அடிப்பகுதிக்கு மூழ்கி, அங்குள்ள ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து ஒரு புதிய உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். இந்த செயல்முறை 'திமிங்கல-வீழ்ச்சி' (Whale-fall) என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இந்தியப் பெருங்கடலின் டயமண்டினா ஃபிராக்சர் மண்டலத்தில் (Diamantina Fracture Zone) கண்டறியப்பட்டுள்ள இந்த பரந்த வாழ்விடச் சங்கிலியை, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆழ்கடல் உயிரினங்களைத் தக்கவைத்த ஒரு "திமிங்கல-வீழ்ச்சி சமூக சூப்பர்காரிடர்" என்று ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.
பரப்பளவு மற்றும் ஆழம்:இந்தத் தளம் கடல் தளத்தில் சுமார் 1,200 கிலோமீட்டர் பரப்பளவிற்கு நீண்டுள்ளது. இது 4,200 முதல் 7,002 மீட்டர் வரையிலான அதீத ஆழத்தில் அமைந்துள்ளது.
கண்டுபிடிப்பின் பின்னணி: 'ஃபெண்டோஷே' (Fendouzhe - ஸ்ட்ரைவர்) என்ற சீன நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடந்த 2023 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தத் தளம் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து 32 கூடுதல் டைவ்கள் (Dives) மூலம் இது ஆய்வு செய்யப்பட்டது.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள்: 5 செயல்பாட்டில் உள்ள (Active) திமிங்கல வீழ்ச்சிகள் உட்பட மொத்தம் 485 திமிங்கல-புதைபடிவ தளங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமான திமிங்கல உடல்கள் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சாதனை: 6,789 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட ஒரு செயல்பாட்டிலுள்ள திமிங்கல-வீழ்ச்சி தளம், இன்றுவரை மனிதகுலம் கண்டறிந்த மிக ஆழமான சுற்றுச்சூழல் அமைப்பாகப் பதிவாகியுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் ஐசோடோபிக் சோதனையில், இங்குள்ள பழமையான புதைபடிவங்கள் 53 லட்சம் ஆண்டுகள் (ஆரம்பகால ப்ளியோசீன் சகாப்தம்) பழமையானவை எனத் தெரியவந்துள்ளது. இதில் தற்போது வாழும் மற்றும் அழிந்துபோன அலகுகள் கொண்ட திமிங்கலங்களின் (Beaked whales) எலும்புகள் அடங்கும்.
குறிப்பாக, அறிவியலுக்கு இதுவரை தெரியாத, முற்றிலும் அழிந்துபோன புதிய திமிங்கல இனம் ஒன்றை விஞ்ஞானிகள் முறைப்படி கண்டறிந்து, அதற்கு 'டெரோசெட்டஸ் டயமண்டினே' (Pterocetus diamantinae) என்று பெயரிட்டுள்ளனர். குறைந்த வண்டல் வீதம் மற்றும் கனிமப் பூச்சுகள் காரணமாக இந்த எலும்புகள் மில்லியன் கணக்கான ஆண்டுகள் சிதையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள 'அண்டார்டிக் மிங்கி திமிங்கலத்தின்' (Antarctic minke whale) உடலும் கண்டறியப்பட்டுள்ளது. அழுகும் இந்த திமிங்கல எச்சங்களிலிருந்து வெளியாகும் ஊட்டச்சத்துக்களை நம்பி வாழும் எலும்பு உண்ணும் புழுக்கள் (Bone-eating worms), உடையக்கூடிய நட்சத்திர மீன்கள் (Brittle stars), புழுக்கள், நண்டுகள் மற்றும் மெல்லுடலிகள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் உயிரின வகைப்பாடுகளை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இதில் பல உயிரினங்கள் அறிவியலுக்கு முற்றிலும் புதியவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அலகுகள் கொண்ட திமிங்கலங்கள் பொதுவாக 1,000 மீட்டருக்குக் கீழே உணவு தேடக்கூடியவை. ஆனால், 3,000 மீட்டருக்கும் கீழே அவை செல்லும்போது ஏற்படும் அதீத சோர்வு அல்லது 'டீகம்ப்ரஷன் சிக்னஸ்' (Decompression sickness) காரணமாக அவை மரணமடைந்திருக்கலாம். மேலும், டயமண்டினா பகுதியின் ஆங்கில எழுத்து 'V' வடிவ நிலப்பரப்பு, மூழ்கும் திமிங்கல உடல்களை ஒரே செறிவூட்டப்பட்ட பகுதிக்குள் தள்ளுவதால் இந்த பிரம்மாண்ட இடுகாடு உருவாகியுள்ளது என்று ஆய்வறிக்கை விளக்குகிறது.
"இது உண்மையிலேயே ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு. இந்த பிராந்தியத்தில் நடத்தப்படும் கூடுதல் ஆய்வுகள் திமிங்கலங்களின் பரிணாமம் மற்றும் ஆழ்கடல் மர்மங்கள் குறித்த இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்தும்" என்று அமெரிக்காவின் கால்வெர்ட் கடல்சார் அருங்காட்சியகத்தின் விஞ்ஞானி ஸ்டீபன் ஜே. காட்ஃப்ரே பாராட்டியுள்ளார்.

