கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில், தகுதிபெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையுடன் களம் கண்டுள்ள குராசோ (Curaçao) தீவு அணி, தனது முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஈக்குவாடர் அணியை சமன் செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் மூலம் குராசோ அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற 'குரூப் இ' (Group E) பிரிவு லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஈக்குவாடர் அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும், குராசோ அணியின் பலத்த தடுப்பாட்டத்தால் ஈக்குவாடர் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 90 நிமிடங்கள் கடந்தும் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியின் டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது குராசோ அணியின் 37 வயது அனுபவமிக்க கோல்கீப்பர் எலாய் ரூம் (Eloy Room) என்பவரின் அசாத்திய ஆட்டம்தான். ஈக்குவாடர் அணி தொடுத்த அனைத்து அட்டாக்குகளையும் ஒற்றை ஆளாக நின்று முறியடித்தார்.

போட்டியின் புள்ளிவிவரங்கள்:

  • பந்து வைத்திருந்த சதவீதம்: ஈக்குவாடர் 65% | குராசோ 35%

  • மொத்த ஷாட்டுகள் (Ecuador): 27

  • இலக்கை நோக்கிய ஷாட்டுகள் (On Target): 15

  • எலாய் ரூம் தடுத்த கோல்கள் (Saves): 15

புதிய உலக சாதனை! உலகக் கோப்பை வரலாற்றிலேயே 90 நிமிட வழக்கமான ஆட்ட நேரத்திற்குள் 15 கோல்களைத் தடுத்து (Saves) புதிய உலக சாதனை படைத்துள்ளார் எலாய் ரூம்.

டிம் ஹோவர்ட் சாதனை முறியடிப்பு?

இதற்கு முன்னதாக, 2014 உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்கு எதிராக அமெரிக்காவின் கோல்கீப்பர் டிம் ஹோவர்ட் 16 கோல்களைத் தடுத்ததே உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக உள்ளது.

இருப்பினும், டிம் ஹோவர்ட் 90 நிமிட வழக்கமான ஆட்ட நேரத்தில் 12 கோல்களை மட்டுமே தடுத்திருந்தார்; எஞ்சிய 4 கோல்களை கூடுதல் (Stoppage) நேரத்தில்தான் தடுத்தார். ஆனால், குராசோவின் எலாய் ரூம் 90 நிமிடங்களிலேயே 15 கோல்களைத் தடுத்து அசாத்திய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் 7 கோல்களைத் தடுத்து கவனம் ஈர்த்திருந்த நிலையில், தற்போது எலாய் ரூமின் இந்த வரலாற்றுச் சாதனை உலகக் கால்பந்து ரசிகர்களைக் குராசோ தீவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.