கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் கடும் கண்டனமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இக்கொடூர செயலில் ஈடுபட்டோருக்குச் சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்."
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், "சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், கோவையில் சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கத் தமிழக அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதால் கோவையில் பரபரப்பு நிலவி வருகிறது.

