கனடாவில் நடைபெற்ற விமானப் பயிற்சியின் போது ஏற்பட்ட கொடூர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்துயரச் சம்பவம் தொடர்பாக வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "விமான விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவர்களான மனோஜ் சிவகுமார் மற்றும் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கட்டான சூழலில் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் தூதரகம் மேற்கொள்ளும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

கனடா செய்தி நிறுவனங்களின் தகவல்படி, 'ஹார்வ்ஸ் ஏர்' (Harvs Air) பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான 'செஸ்னா 172' (Cessna 172) ரக விமானத்தில், ரெஜினா பகுதியிலிருந்து மனிடோபாவின் ஸ்டீன்பாக் பகுதிக்கு இரவு நேர நீண்ட தூரப் பயணமாக இருவரும் சென்றுள்ளனர். வர்த்தக விமான ஓட்டுநர் உரிமத்திற்காக (Commercial Pilot License) பறக்கும் மணிநேரத்தை அதிகரிக்கும் (Flying Hours) முயற்சியாக இவர்கள் இந்த விமானத்தை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சஸ்காட்செவனின் கிஸ்பே அருகே பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 10.30 மணிக்குள் இலக்கை அடையாததால் சந்தேகமடைந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அன்று மாலை 6 மணியளவில் விபத்துக்குள்ளான விமானம் கண்டறியப்பட்ட நிலையில், அதில் பயணித்த இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கனடா விமானப் போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.