அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு அவர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக ‘இபிஎஸ் அணி’, ‘எஸ்.பி. வேலுமணி அணி’ என இரண்டாகப் பிரிந்தது.
இதில் வேலுமணி அணியில் சி. விஜயபாஸ்கரும் இடம்பெற்றிருந்தார். பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்த போதிலும், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இபிஎஸ்ஸை சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தனர்.
அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் ஏற்கனவே தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்தார். மேலும், அதிமுக தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது எக்ஸ் (X) பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார்.
அதிமுகவிலிருந்து விலகியுள்ள விஜயபாஸ்கர், தவெக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்தை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜூன் 24) சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புடன் சேர்த்து, இதுவரை அவர் அமைச்சர் ஆனந்தை இரு முறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் திட்டமிட்டபடி, ஜூன் 29 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில், முதல்வர் விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் தவெகவில் இணையவிருந்தார்.
மாற்றத்திற்கான காரணம்: ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளதால், அதில் முதல்வர் விஜய் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் இந்த இணைப்பு நிகழ்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அன்றைய தினம் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாகத் தேதி மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்க தவெகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியக் காரணங்கள்:
விஜயபாஸ்கர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு.
சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் குட்கா ஊழல் வழக்கு.
"ஊழல் வழக்குகள் பின்னணியில் இருக்கும் ஒருவரை ஏன் கட்சியில் இணைக்க வேண்டும்?" என தவெகவினர் கேள்வி எழுப்பி வருவதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதான் பனையூர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம் என்பதால், இந்த விவகாரத்தில் தவெக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

