"ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூலதனம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 28) மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
தாராபுரத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
சினிமா வசனம் மட்டுமே பேசிச் செல்கிறார்: "அரசியலுக்கு வருகிறவர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால், சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால், முதலமைச்சர் விஜய் சினிமா வசனங்களை மட்டுமே பேசிவிட்டுச் செல்கிறார். கோட் சூட் அணிந்து அழகாக ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், அதை பத்திரிகைகளில் படம்பிடித்துக் காட்டுவதுமே நடக்கிறது. ஆனால், அந்த ஆய்வுக் கூட்டங்களின் முடிவு குறித்து எதையுமே அவர் பேசுவதில்லை" என்றார்.
எளிமை இல்லாத ஆட்சி: "காலை அலுவலகத்திற்கு வருவது போல வந்துவிட்டு, மாலை 5 மணிக்கு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை யாரும் பார்க்க முடியாது. இப்படி ஒரு முதலமைச்சரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது. மேட்டூர் அணையில் தண்ணீரைத் திறந்துவிட வருவதற்கு மட்டும் ரூ.4.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. எளிமையாக வந்து தண்ணீர் திறந்துவிட்டுச் செல்ல முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர் மின்வெட்டு மற்றும் பொருளாதாரச் சீரழிவு: "மக்கள் பிரச்சினைகளுக்காக நான் 7 முறை சிறை சென்றுள்ளேன். முதல்வர் விஜய் மக்களின் எத்தனை பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்றார்? தவெக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஆளும் கட்சி அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் அளித்தோம். ஆனால், தற்போது போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகின்றனர். மாநிலத்தில் நிதி நிலைமை சரியில்லை என வெள்ளை அறிக்கை வெளியிட்டுவிட்டு, புதிய தலைமைச் செயலகம் எதற்கு?" என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.
செய்தி 2: போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டறிப்பு: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் விமானங்கள் பாதிப்பா?
வர்ஜீனியா (அமெரிக்கா):
பிரபல அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' தயாரித்த பி737 மேக்ஸ் (B737 MAX) வகை விமானங்களில் புதிய மென்பொருள் (Software) கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் போயிங் நிறுவனம், உலகம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட பி737 மேக்ஸ் விமானங்களை விநியோகித்துள்ளது. இதில் இந்தியாவில் உள்ள 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஆகாசா ஏர்' ஆகிய விமான நிறுவனங்களிடம் மொத்தமாக சுமார் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
கோளாறினால் ஏற்படும் பாதிப்பு என்ன? இந்த மென்பொருள் கோளாறினால், விமானம் தரையிறங்க முடியாமல் போகும் அசாதாரணச் சூழல் ஏற்படுகையில், விமானத்தை தானாகவே வழிநடத்தும் ‘ஆட்டோபைலட்’ (Autopilot) அமைப்பு செயல்படாமல் போகக் கூடும் எனக் கூறப் படுகிறது.
போயிங் விளக்கம்: இது தொடர்பாக போயிங் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பி737 விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த மென்பொருள் கோளாறு குறித்துத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனப் பொறியாளர்கள் இதற்கான நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இக்கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படுகிறதா அல்லது இந்திய விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல் எதையும் வெளியிடவில்லை.

