நமது அன்றாட வாழ்வில் மிக மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரே பழம் வாழைப்பழம் தான். ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் அசாத்திய மருத்துவ நன்மைகள் குறித்து நிபுணர்கள் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து புகழ்பெற்ற மருத்துவர் அன்ஷுமணி தாஸ் மற்றும் சுகாதார நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்களின் தொகுப்பு இதோ

வாழைப்பழத்தில் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடியாக வீரியமிக்க ஆற்றலை (Instant Energy) வழங்குகின்றன. இதனால்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்கள் தங்களின் டயட்டில் வாழைப்பழத்தை முக்கிய உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். காலை உணவோடு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

மருத்துவர்களின் பரிந்துரை: நன்கு பழுத்த வாழைப்பழங்களைத் தேன் மற்றும் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்றுப் புண்கள் (Ulcer) குணமாகும். எனினும், தீவிர வயிற்றுப் உபாதைகள் உள்ளவர்கள் இதனை அளவோடு சாப்பிட வேண்டும்.

  • இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்: வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைத்திருக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்குப் பக்கபலமாக இருக்கும்.

  • இரத்த சோகை நீங்கும்: இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, அனீமியா எனப்படும் இரத்த சோகை குறையை போக்குகிறது.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் கண் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுகின்றன. இதனால் பலர் வாழைப்பழத்தை ஃபேஸ் பேக் (Face Pack) போலவும் பயன்படுத்துகின்றனர். மேலும், இதிலுள்ள மாங்கனீசு எலும்புகளை வலுவாக்குகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம் மற்றும் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலை நேர குமட்டல் உணர்வைக் கட்டுப்படுத்த வாழைப்பழம் சிறந்த ஊட்டச்சத்தாக விளங்குகிறது

நமது பகுதிகளில் எளிதாகக் கிடைக்கும் பச்சை வாழைப்பழங்களில் 'எதிர்ப்பு ஸ்டார்ச்' (Resistant Starch) அதிகமாக உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஓரளவிற்கு உதவுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் (Diabetes Patients) தங்களின் ரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுருக்கமாகக் கூறின், வாழைப்பழம் என்பது வெறும் சாதாரண பழமல்ல; அது உடலுக்குத் தேவையான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் ஒரு இயற்கை மருந்தாகும்!