பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, "இது நம்ம இயக்கம்" (We the Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் தனது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதிய இயக்கத்திற்கான இணையதளத்தைத் தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையையும் அவர் முறைப்படி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகப் பக்க நேரலையில் (Live) அண்ணாமலை பேசியதாவது:
"பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்தில் இணைந்தேனே, அதே இடத்தில் மரியாதையோடு சொல்லிவிட்டு, தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன். பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், கடந்த 18 மாதங்களாக எனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளைத் தலைமைக்குக் கூறி வந்தேன்.
கடந்த டிசம்பர் 4, 2025 அன்றே பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தேன். ஆனால், தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்கச் சொன்னார்கள். அதன்படியே கடைசி வரை தேர்தல் களத்தில் பணியாற்றினேன்."
தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதுவரை பலரும் அறியாத சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:
விஜயகாந்திடம் பயிற்சி: "லக்னோவில் நான் படிக்கும்போது, 2009-ல் தேமுதிகவில் கேப்டன் விஜயகாந்த்திடம் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் (Internship) செய்தேன். எனது அரசியல் பாதை சாதாரணமாக அமைந்துவிடவில்லை."
ரஜினிகாந்த் விடுத்த அழைப்பு: "2020 ஆகஸ்ட் 24 அன்று நான் பாஜகவில் இணையும்போது, நடிகர் ரஜினிகாந்த் என்னைத் தொடர்புகொண்டு தனது இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜகவில் இணைவேன் என்ற வாக்குறுதியை மீறக் கூடாது என நினைத்தேன். பின்னர் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பும் கேட்டேன். யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை இப்போது கூறுகிறேன்."
தமிழ்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, மேக்கேதாட்டு பிரச்னையின்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டு மக்களுக்காகப் போராடியதை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து தனது புதிய இயக்கத்தின் நோக்கம் குறித்துப் பேசிய அவர்:
"ஆனந்தத்தோடு தமிழ்நாட்டில் புதிய இயக்கத்தை இன்றுமுதல் தொடங்கியுள்ளேன். வரும் பொதுத் தேர்தலில் நமது கட்சி கண்டிப்பாகப் போட்டியிடும். பிம்ப அரசியலைத் தவிர்த்து, சாமானிய அரசியலை முன்னெடுக்கப் போகிறேன்.
முதலில் இதனை ஓர் இயக்கமாகக் கொண்டு சென்று, பல்வேறு தரப்பினரையும் உள்ளே கொண்டு வந்து, அரசியலைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர்தான், இதனை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும். அதுவரை தொண்டர்கள் பொறுத்திருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

