உடல் பருமன் மற்றும் அரிதான சரும நோயால் பாதிக்கப்பட்டு, இரவு பகலாக தண்ணீருக்குள்ளேயே வாழ்ந்து வந்த மேற்கு வங்க சிறுவனின் மருத்துவச் செலவை தொழிலதிபர் அனந்த் அம்பானி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விநோதமான உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. நீரிலிருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போன்ற கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்பட்டதால், அந்த சிறுவன் எப்போதும் குளத்து நீரிலேயே இருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். குளத்தில் இருந்தபடியே அவர் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் விடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

பொருளாதார நெருக்கடி காரணமாக அச்சிறுவனின் குடும்பத்தினரால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வந்தனர். மேலும், தொடர்ச்சியாக நீரிலேயே இருப்பதால் சிறுவனுக்கு மேலும் தீவிரமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

அனந்த் அம்பானியின் உதவி: இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சிறுவன் இக்பாலுக்கு உதவ அனந்த் அம்பானி உடனடியாக முன்வந்தார். அதன்படி, சிறுவன் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிறுவனுக்குத் தேவையான சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. அனந்த் அம்பானியின் இந்தச் செயலால், சிறுவன் விரைவில் முழுமையாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.