மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, தில்லியிலிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் (Tel Aviv) நகரத்திற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகளுக்கான தற்காலிகத் தடை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் மாதம் வரை மட்டுமே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு அசாதாரண சூழல் நீடிப்பதால் இந்தத் தடைக்காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மூண்டது முதலே சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மிக மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல், ஈரான் மற்றும் அதன் சுற்றியுள்ள பிராந்திய வான்வழிகளைப் பெரும்பாலான உலக நாட்டு நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. இதனால் மாற்றுப் பாதையில் சுற்றியே இயக்க வேண்டியுள்ளதால், விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு மற்றும் பயண நேரம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழலில் இஸ்ரேலுக்குள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மட்டுமே சேவைகளை வழங்கி வருகின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்தத் தொடர் சேவை முடக்க அறிவிப்பு, இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் தற்போதைய நிலவரப்படி சுமார் 40,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இயக்கப்படும் ஒருசில மாற்று வெளிநாட்டு விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் பல மடங்கு விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சாதாரணப் பணிகளில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கெனவே ஜூலை 31க்கு இடைப்பட்ட தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, விமானக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் (Refund) அல்லது ஒருமுறை கட்டணமின்றி தேதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு (Reschedule) வழங்கப்படும் என ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.